Wednesday, September 8, 2010

புதிய பறவை-புதிய அனுபவம்!

அப்பொழுதெல்லாம் சென்னை தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு தமிழ்ப் படம் போடுவார்கள்.அது எவ்வளவு மொக்கை படமாக இருந்தாலும் பார்த்து தொலைக்கவேண்டிய கட்டாயம்.அப்படி ஒரு ஞாயிறன்று பார்த்த படம்தான் இந்த புதிய பறவை! படத்தின் பெயரையும் ஹீரோ சிவாஜி என்பதையும் வைத்து இது ஏதோ அழுகாச்சி படம் என்ற மனநிலையில் தான் படம் பார்க்க அமர்ந்தோம்.ஆனால் படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் என் எண்ணம் தவிடு பொடியானது.தமிழில் வெளிவந்த one of the best suspense thirller movies என்று இந்த படத்தை சொல்ல முடியும்.இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிவாஜியின் நடிப்பு உலகின் எந்த நடிகரின் நடிப்புக்கும் சவால் விடக்கூடியது என்பது என் ஆணித்தரமான வாதம்.தமிழ் சினிமாவில் வந்த one of the best climax scenes  இந்த படத்தினுடையது.ஏதேதோ படங்களை எல்லாம் ரீமேக் செய்யும் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தை தேர்ந்த நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் கொண்டு ரீமேக் செய்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது என் கருத்து.அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்? பொதுவாக SUSPENSE THRILLER படங்களின் கதையை சொன்னால் படம் பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் குறைந்து விடும்.ஆனாலும் இந்த படத்தின் கதையை சொன்னால்தான் உங்களில் சிலர் இந்த படத்தை பார்க்க ஆர்வப்படுவீர்கள் என்பதால் படத்தின் கதையை (க்ளைமேக்ஸ் தவிர்த்து) உங்களுக்கு குழப்பமில்லாமல் சொல்ல முயற்சிக்கிறேன்.

                                                        

சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பி கொண்டிருக்கும் கப்பலில் எதேச்சையாக சந்திக்கிறார்கள் சிவாஜியும் சரோஜாதேவியும்.சரோஜாதேவியின் அப்பா வி.கே.ராமசாமியும் உடன் இருக்கிறார்.தமிழ் சினிமா மரபுப்படி சிவாஜிக்கும் சரோஜாதேவிக்கும் கண்டவுடன் காதல் மலர்கிறது.ஆனால் இருவரும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இந்தியா வந்ததும் சிவாஜி தன்னுடைய ஊட்டி எஸ்டேட்டுக்கு வருமாறு சரோஜாதேவியையும் அவரது அப்பா வி.கே.ராமசாமியையும் அழைக்கிறார்.சில நாட்கள் கழித்து சரோஜாதேவியும் ,வீ.கே.ராமசாமியும் சிவாஜியின் ஊட்டி எஸ்டேட்டுக்கு விஜயம் செய்கிறார்கள்.அப்பொழுது சிவாஜி தான் ஒரு அனாதை என்றும் உறவினர் யாரும் இல்லை என்றும் சொல்லி சரோஜாதேவியையும் வீ.கே.ராமசாமியையும் தன்னுடன் சில நாட்கள் தங்கி இருக்க சொல்கிறார்.
இந்த நாட்களில் சிவாஜிக்கும் சரோஜாதேவிக்கும் காதல் முற்றுகிறது.இருவரும் ஊட்டியில் டூயட் பாடுகிறார்கள்.இது AS USUAL தமிழ்சினிமா தானே என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

டூயட் பாடி முடித்து காரில் திரும்பிக்கொண்டிருக்கும் போது வழியில் ரயில்வே கிராஸிங்கில் ரயில் வருவதற்காக கேட் மூடப்பட்டிருக்கிறது.ரயில் கடப்பதற்காக காரில் சிவாஜியும் சரோஜாதேவியும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.ரயில் சத்தம் கேட்க கேட்க சிவாஜிக்கு ஒரு விதமான பதட்டம் ஏற்படுகிறது..ரயில் கடக்கும் போது சிவாஜி உச்சபட்ச பதட்டத்தை அடைகிறார்.இதை கவனித்த சரோஜாதேவி காரணத்தை துருவி துருவிக் கேட்க அதற்கு சிவாஜி சொல்லும் காரணம் கேட்டு சரோஜாதேவி அதிர்ச்சி அடைகிறார்.(படத்தின் முதல் திருப்பம்) ஆம் !சிவாஜி ஏற்கனவே சிங்கப்பூரில் இருக்கும் போது திருமணம் ஆனவர்.அப்படியானால் முதல் மனைவி? ஃப்ளாஷ்பேக் விரிகிறது.



   


சிங்கப்பூரில் ஒரு ஓட்டலில் பாடகராக இருக்கும் சவுகார் ஜானகியின் அழகிலும் குரல் வளத்திலும் மயங்கி அவரை காதலித்து திருமணம் செய்கிறார் சிவாஜி.ஆனால் திருமணத்திற்கு பிறகுதான் சவுகார் ஜானகியின் உண்மையான முகம் தெரிய வருகிறது.போதைக்கு அடிமையான அவர் தினமும் நடுநிசியில் வீடு திரும்ப, சிவாஜிக்கும் சவுகார் ஜானகிக்கும் சண்டை வலுக்க ஒருநாள் இரவில் சவுகார் ஜானகி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.முதலில் கோபத்தில் இருக்கும் சிவாஜி பின் எப்படியாவது சவுகார் ஜானகியை சமாதனப்படுத்தி கூட்டி வர கிளம்புகிறார்.வழியில் சவுகாரை சந்திக்கும் சிவாஜி வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார்.ஆனால் சவுகார் ஜானகியோ சிவாஜியை மேலும் அவமானப்படுத்த சிவாஜி அவரை அறைந்து விட்டு வீடு திரும்புகிறார்.அவமானம் தாங்க முடியாமல் சவுகார் ஜானகி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிலிருந்து தனக்கு எப்போது ரயில் சத்தம் கேட்டாலும் தனக்கு இந்த பதட்டம் ஏற்படுவதாக ப்ளாஷ்பேக் சொல்லி முடிக்கிறார் சிவாஜி

தான் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்ற உண்மையை வேண்டுமென்றே மறைக்கவில்லை என்றும் தனது கசப்பான கடந்த காலத்தை மறப்பதற்காகவே முதல் மனைவியை மறைத்ததாகவும் சிவாஜி சொல்ல சரோஜாதேவி சமாதானமடைகிறார்.அவரை திருமணம் செய்யவும் சம்மதிக்கிறார்.அவரது அப்பா வீகே ராமசாமியையும் சம்மதிக்க வைக்கிறார்.திருமண நிச்சயதார்த்ததிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

நிச்சயதார்த்தன்று மாலை மாற்றிக் கொள்ளும் சமயத்தில் வாசலில் ஒரு குரல் கேட்கிறது அத்தான் என்று ! (படத்தின் இரண்டாவது திருப்பம்.) பார்த்தால் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட சிவாஜியின் முதல் மனைவி சவுகார் ஜானகி! படத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல படம் பார்க்கும் நமக்கும் அதிர்ச்சி!தற்கொலை செய்து கொண்டது தான் அல்ல என்றும் தான் இதுவரையில் பெங்களூரில் இருக்கும் தனது சித்தப்பா வீட்டில் இருந்ததாகவும் இப்பொழுது மனம் திருந்தி கணவருடன் வாழ வந்திருப்பதாகவும் சொல்கிறார் அந்தப் பெண்.எல்லோரும் குழப்பமடைந்திருக்க சிவாஜி இவள் என் மனைவி இல்லை என்றும் தன் மனைவி தற்கொலை தான் செய்து கொண்டாள் என்றும் சொல்கிறார்.அவள் பிணத்தை தான் தான் அடையாளம் காட்டியதாகவும் சொல்கிறார்.இவள் தன் மனைவியை போலவே ஒத்த உருவம் கொண்டவள் என்றும் தன்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே இப்படி நாடகம் ஆடுவதாகவும் சொல்கிறார்.

இந்த குழப்பத்தால் சிவாஜிக்கும் சரோஜாதேவிக்குமான திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுகிறது.சரோஜாதேவி சிவாஜியை விட்டு பிரிய நினைக்கிறார்.ஆனால் சிவாஜி தனக்கு சில நாட்கள் அவகாசம் தருமாறும் அதற்குள் இவள் தன் முதல் மனைவி இல்லை என்பதை நிருபிப்பதாகவும் சொல்கிறார்.சரோஜாதேவியும் அதற்கு சம்மதித்து அந்த வீட்டிலேயே இருக்க முடிவு செய்கிறார்.சிவாஜி அவளை தன் முதல் மனைவி இல்லை என்று  நிருபிப்பதற்காக தன் நண்பனான போலீஸ் இன்ஸ்பெக்டரின் உதவியை நாடுகிறார்.முதலில் தற்கொலை செய்துகொண்ட முதல் மனைவியின் அங்க அடையாளங்கள் பற்றி  ஆராயும் போது அவருக்கு முதுகில் ஒரு பெரிய தழும்பு இருந்தது தெரிய வருகிறது.அந்த தழும்பு கண்டிப்பாக இந்த பெண்ணுக்கு இருக்காது என்றும் அதை வைத்து இவள் போலி என நிருபிக்கலாம் என்று இன்ஸ்பெக்டர் சொல்கிறார்.

அதன்படி சிவாஜியும் நடுக்கூடத்தில் வைத்து அவளின் ரவிக்கையை கிழித்து முதுகை பார்க்கும் போது முதல் மனைவிக்கு இருந்ததை போலவே அதே இடத்தில் தழும்பு இருக்கிறது. (மூன்றாம் திருப்பம்)மேலும் குழப்பம் அதிகரிக்கிறது.சிவாஜி மட்டும் இவள் தன் முதல் மனைவி இல்லை தன்னை சுற்றி ஏதோ சதி நடப்பதாக சொல்கிறார்.மறுநாள் இரவில் சிவாஜி எந்த பாட்டை கேட்டு மயங்கி தன் முதல் மனைவியை காதலித்தாரோ அதே பாட்டை இந்த புதிய பெண்ணும் பாடிக்கொண்டிருக்கிறார்.சிவாஜிக்கு ஆச்சர்யம்.இந்த பாட்டு உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க அவளோ அத்தான் இந்த பாட்டுதானே உங்களை என்னை காதலிக்கவைத்தது என்கிறாள்.(நான்காம் திருப்பம்)சரோஜாதேவிக்கு சிவாஜியின் மீதான நம்பிக்கை குறைகிறது.இவள்தான் உங்கள் முதல் மனைவி என்றும் இவருடன் தான் நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும் தான் பிரிந்து செல்வதாகவும் சொல்கிறார்.சிவாஜி தனக்கு கடைசியாக ஒரு சந்தர்ப்பம் தருமாறும் எப்படியும் இவள் போலி என்று நிருபிப்பதாக சொல்கிறார்.

என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் சிவாஜிக்கு கடைசியாக ஒரு யோசனை வருகிறது.தன் முதல் மனைவியின் அண்ணன் சிங்கப்பூரில் இருப்பதாகவும் அவருக்கு அவள் தங்கை அதாவது தன் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டது நன்றாக தெரியும் என்றும் அவரும்தான் பிணத்தை அடையாளம் காட்டியதாகவும் அவரை வரவழைத்தால் எல்லா குழப்பங்களும் தீரும் என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்ல அவரும் அவளது அண்ணனை சிங்கப்பூரிலிருந்து வரவழைக்க ஏற்பாடு செய்கிறார்.

அதே சமயம் இன்ஸ்பெக்டர் எப்படியாவது வந்திருக்கும் புதிய பெண்ணின் கைரேகையை தன்னிடம் கொண்டுவந்து கொடுக்குமாறும் அதை இறந்து போன முதல் மனைவியின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இவள் போலி என்று தெரிந்து விடும் என்று சொல்ல சிவாஜிக்கு நம்பிக்கை பிறக்கிறது.எப்படியோ அவளது கைரேகையை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விடுகிறார்.

க்ளைமேக்ஸ்- சிங்கப்பூரிலிருந்து முதல் மனைவியின் அண்ணன் வருகிறார்.அவரிடம் சிவாஜி , வந்திருக்கும் புதிய பெண் தன் முதல் மனைவிஇல்லை        என்று         அடையாளம்       காட்ட     சொல்கிறார்.
ஆனால்..............அந்த புதிய பெண்னை பார்த்ததும் இவள்தான் தன் தங்கை  என்றும் சிவாஜியின் முதல் மனைவி என்றும் சொல்கிறார் அண்ணன்.இத்தனை நாள் இவள் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார்.அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!சிவாஜிக்கே இப்போது நம்பிக்கை தளர்கிறது.அதே சமயத்தில் இன்ஸ்பெக்டர் அங்கு வருகிறார்.இரண்டு கைரேகைகளையும் ஒப்பிட்டு பார்த்ததாக சொல்கிறார்.சிவாஜிக்கு மீண்டும் நம்பிக்கை பிறக்கிறது.உடல்,உருவம்,முகம் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கலாம் ஆனால் கைரேகை மாறுபட்டே ஆகவேண்டும் அதை வைத்து இவள் போலி என்பது இப்போது தெரியவரும் என்கிறார். ஆனால்.......................இன்ஸ்பெக்டர் இரண்டு கைரேகைகளூம் ஒரே மாதிரியாக இருப்பதாக சொல்கிறார்.அப்படியானால்? அப்படியானால்?  வந்திருப்பது சிவாஜியின் முதல் மனைவிதானா? சிவாஜி ஏன் இல்லை என்று மறுக்கிறார்? அப்படியானால் கண்டெடுக்கப்பட்ட பிணம் யாருடையது? இத்தனை கேள்விகளுக்கும் படத்தின் கடைசி பதினைந்து நிமிடங்கள் பதில் சொல்கிறது.க்ளைமேக்ஸில் முதல் அதிர்ச்சியை தாங்கும் முன்பே நமக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது .படத்தை முதல் முறை பார்ப்பவர்களால் க்ளைமேக்ஸை யூகிக்க முடிந்தால் அவர்களுக்கு ஒரு HATS OFF!

அங்கங்கே சில லாஜிக் மீறல்கள்.தேவையில்லாத நாகேஷின் காமெடிக் காட்சிகள் என்று சில குறைகள் இருந்தாலும் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,இசை,ஒளிப்பதிவு,நடிப்பு என எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கிய அந்த காலக் கட்டத்தில் வந்த ஒரு HI-TECH THRILLER படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்ததில் படம் சில்லிட வைக்கும் ஒரு அனுபவம்!

Puthiya Paravai -A movie that gives roller coaster ride experience!

1 comment:

  1. Superப‌ட‌ம்.Antiheroவாக‌ அப்போதே ந‌டித்திருக்கிறார்.சிவாஜி எல்லா வ‌ய‌தின‌ரையும் ஏதோ ஒரு வ‌கையில் க‌வ‌ர்ந்திருக்கிறார்.வாழ்த்துக்க‌ள்

    ReplyDelete