Saturday, December 4, 2010

நந்தலாலா - 'நிமிர்ந்த'லாலா

சில ஆண்டுகளுக்கு முன் விசில் என்றொரு படம் வந்தது.எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பங்குதாரராக இருந்த மீடியா டீரிம்ஸ் தயாரித்த அந்த படம் பார்த்த பத்து நிமிடங்களில் அது ஆங்கிலத்தில் வெளிவந்த URBAN LEGEND என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான காப்பி என்பது புரிந்தது.இத்தனைக்கும் அது பயங்கர திரில்லர் வகைப் படம்.அதில் கூட நம்மவர்கள் விவேக்கின் மொக்கை காமெடி ட்ராக்கைச் சேர்த்திருப்பார்கள்.இதையெல்லாம் யாரும் அப்போது விமர்சித்ததாக தெரியவில்லை.ஆனால் இன்று கிக்குஜிரோ என்ற ஜப்பானிய படத்தை தழுவி அற்புதமாக எடுக்கப்பட்ட நந்தலாலா படம் காப்பி என வர்ணிக்கப்படுவது வேதனையிலும் வேதனை!     



சித்திரம் பேசுதடி படம் பார்த்த உடனே புரிந்தது மிஷ்கின் ஒரு மிகத்திறமையான இயக்குனர் என்று.அஞ்சாதே படத்தின் ஆரம்பக்காட்சியும்,  முகத்தையே காட்டாமல் கருப்பு உடையுடனும் மொட்டைத்தலையுடனும் வரும் கதாபாத்திரமும் ,கடைசி கட்ட கரும்புக் காட்டு காட்சியும் தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத காமிரா கோணங்களும் மிஷ்கின் என்ற இயக்குனரின் ஆளுமையை உணர்த்தியது.
இப்போது நந்தலாலா.இரு வேறு காரணங்களுக்காக தங்கள் தாயை சந்திக்க மனநிலை பிறழ்ந்த  இளைஞன் பாஸ்கர்மணியும் ,பள்ளிச்சிறுவன் அகிலும் சேர்ந்து செய்யும் பயணமும் வழியில் அவ்ர்கள் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வேறுபட்ட உணர்வுகளும் தான் படம்!

                                                   

சமீப காலங்களில் உலக சினிமா என்றும் CLASSIC என்றும்வர்ணிக்கப்படும்
படங்களுக்கு சவாலாக தமிழில் உருவாக்கப்பட்ட படம் நந்தலாலா என்பதில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை.படத்தின் பல காட்சிகள் அதை நிரூபித்திருந்தாலும் என்னை என்னவோ செய்த காட்சி ஐந்து மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது பின்னால் ஊர்ந்துசெல்லும் மலைப்பாம்பும் அந்த காட்சிக்கு இளையராஜா கொடுத்திருக்கும் பின்னணி இசையும் தமிழ் சினிமாவின் உயர்தர ரசனையின் உச்சம்.

                                                        
                                                        
இளையராஜா இசை இல்லாதிருந்தால் நந்தலாலாவின் பயணம் நூலருந்த பட்டமாக திசை தடுமாறி போயிருக்கும்.எல்லா கதாபாத்திரங்களையும் தன் இசை மூலம் வழிநடத்திச் செல்கிறார் ராஜா.நான் முன் சொன்ன காட்சியில் அந்த மலைப்பாம்பை கூட நடிக்க வைத்திருந்தது ராஜாவின் பின்னணி இசை.அவருக்குத் துணையாக இருப்பது ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் அற்புத ஒளித்தீற்றல்கள்.

நடிப்பு,திரைக்கதை,காட்சிகளின் குறியீடு,கதாபாத்திரங்களின் அமைப்பு இப்படி எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்கிறார் இயக்குனர் மிஷ்கின்.கமல்ஹாசன் நடிகர் திலகம் சிவாஜியை பற்றிக் குறிப்பிடும்போது உலகின் எத்தனை சிறந்த நடிகர்கள் இருந்தாலும் என் கரையில் நான் கண்ட சூரியன் சிவாஜி என்று குறிப்பிடுவார்.அதையே வழிமொழிந்து உலக சினிமாக்கள் பல இருந்தாலும் எனக்குப் புரிந்த,பிடித்த,நான் உணர்ந்த முதல் உலக சினிமா நந்தலாலா என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை!

NANDALALA - Feel proud for tamil cinema! 

Saturday, November 6, 2010

மைனா - A must watch !

அலுவலகம் இடம் மாற்றப்பட்ட காரணத்தால் தினமும் நான்கு மணி நேரம் பயணத்திற்கு செலவு செய்ய வேண்டியுள்ளதால் நீண்ட நாட்களாக பதிவு எழுத முடியவில்லை.எப்போதும் தீபாவளிக்கு மறுநாள் புதுப்படம் பார்ப்பது வழக்கம் அந்த வரிசையில் இன்று பார்த்தது மைனா!தமிழ் சினிமாவுக்கு இந்த தலைப்புகள் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நான் யோசித்து வைத்திருந்த தலைப்புகளில் ஒன்று மைனா.இன்னொரு தலைப்பு அச்சம் தவிர். ஈரம் படம் எடுத்த அறிவழகனின் அடுத்த படத்தின் தலைப்பு இதுதான் என்று கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி.சரி விசயத்திற்கு வருவோம்.மைனா மாறுப்பட்ட தமிழ் சினிமாக்களில் மற்றுமொரு முயற்சி.தீபாவளிக்கு முதல் நாள் தொடங்கி தீபாவளியன்று முடியும் இரண்டு நாட்களில் நடக்கும் கதை.

படத்தின் துவக்க காட்சியில் கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த கதாபாத்திரமே கதையின் முடிவுக்கு காரணமாக்கியிருப்பது,இயல்பான காதல் கதையை அசாத்தியமான மலை பிரதேச பின்புலத்தில் படமாக்கியிருப்பது போன்றவை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக பிரபு சாலமன் வலம் வருவதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.சிறு வயதிலிருந்து பழகிய தன் தோழி/காதலி மைனாவின் அவசர கல்யாணத்தை தடுக்க பெரியகுளம் சிறையிலிருந்து தப்பித்து தன் குரங்கணி கிராமத்திற்கு வருகிறான் சுருளி.அவனை கண்டுபிடித்து திரும்பவும் சிறையில் அடைப்பதற்காக இன்ஸ்பெக்டர் பாஸ்கரும்,கான்ஸ்டெபிள் ராமையாவும் குரங்கணி கிராமம் வருகிறார்கள்.சுருளி மைனாவின் அம்மா குருவம்மாவிடம் சண்டை போட்டு மைனாவின் கல்யாணத்தை தடுத்து நிறுத்த அப்போது அங்கு வரும் இன்ஸ்பெக்டர் பாஸ்கரும் ,கான்ஸ்டெபிள் ராமையாவும்  சுருளியை கைது செய்து அழைத்துச் செல்ல மைனாவும் அவர்களுடன் கிளம்புகிறாள்.இதன் பிறகு சுருளி ,மைனா,பாஸ்கர் ,ராமையா இந்த நான்கு கதாபாத்திரங்களின் குரங்கணி கிராமம் முதல் பெரியகுளம் வரையான பயணமும் சுருளி,மைனா காதலின் முடிவும்தான் படம்.

கதையாக சொல்லும் போது சுவாரசியம் குறைவாக தெரிந்தாலும் ரசனையான காட்சிகள் மற்றும் படமாக்கிய விதத்தில் மைனா உயரே பறக்கிறது.சுருளியான வரும் விதார்த்,மைனாவாக வரும் அமலா,இன்ஸ்பெக்டர் பாஸ்கராக வரும் சேது புதுமுகங்களாக இருந்தாலும் தன் வேலையை செவ்வனே செய்து இருக்கிறார்கள்.இதுவரை வடிவேலுடன் காமெடி செய்து அவரை வைத்து இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தை இயக்கிய தம்பி ராமையா இந்த படத்தில் கான்ஸ்டபிள் ராமையாவாக நடிப்பில் அசத்தி இருக்கிறார்.இவர்கள் தவிர படத்தில் வரும் அத்தனை சிறு கதாபாத்திரங்ககளும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

இமானின் இசையில் நீயும் நானும் பாடல் காதுகளுக்கு இனிமை ,பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மெருகு கூட்டியிருக்கலாம்.சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம்.சிறு சிறு காட்சிகளில் கூட இயக்குனர் சிரத்தை எடுத்து இருக்கிறார்.படம் முழுக்க மெல்லிய நகைச்சுவை இழையோடிக் கொண்டிருப்பது படத்தில் அங்கங்கே ஏற்படும் தொய்வை சரிகட்டுகிறது!சமீபத்திய திரைப்படங்களை போலவே இந்த படத்திலும் நெகடிவ் கிளைமாக்ஸ்.இருந்தாலும் சற்று யூகிக்க முடிந்த ஆனால் அழுத்தமான கிளைமாக்ஸ்.

படத்தின் சில காட்சிகள் பருத்திவீரன்,பூ இன்னும் பிற படங்களை ஞாபகப்படுத்தினாலும் மைனா -JOURNEY OF LOVE என்ற படத்தின் TAGLINE க்கு ஏற்ப இயல்பான காதலை அழகான பயணத்தின் ஊடாக சொல்லியிருப்பது தமிழ்சினிமாவின் இன்னொரு சிறந்த முயற்சி.

MYNAA - An enjoyable journey!

Friday, September 17, 2010

ராஜாவுக்கு நான்காம் தேசிய விருது!

என் முதல் பதிவாக ராஜாவைப் பற்றி எழுதிய நேரமோ என்னவோ அவருக்கு நான்காம் தேசிய விருது கிடைத்துள்ளது!இதுவரை இரண்டு தெலுங்கு  படங்களுக்கும் சாகர சங்கமம் (1984),ருத்ரவீணா(1989)  ஒரு தமிழ் படத்துக்கும் சிந்து பைரவி (1986)தேசிய விருது பெற்ற ராஜா கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பின் (இதிலிருந்து தேசிய விருதுகளின் தேர்ந்தெடுப்பில் உள்ள நேர்மை(?) புரியும் ) இப்பொழுது  பழசிராஜா என்ற மலையாள படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதினைப் பெறுகிறார்.இந்த ஆண்டுதான் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அறிமுகப்படுத்தப்படுவதும் அதை முதன் முதலாக பெறுபவர் ராஜா என்பது  பெருமையிலும் பெருமை!

 

என் முதல் பதிவில் சொல்லி இருந்தைப் போல் திரைப்படத்தின் எந்த ஒரு காட்சியையும் ராஜாவின் பின்னணி இசை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும்.அதிலும் காட்சி சிறப்பாக அமைந்து விட்டால் அதற்கு ராஜாவின் பின்னணி இசை சேர்க்கும் உணர்வு அளவிட முடியாதது என்பதற்கு தளபதி படத்தில் வரும் கீழ்காணும் காட்சி ஒரு சின்ன SAMPLE.





4th National Award for Ilayaraja - There is no award to evalaute this man's talent.







.

Wednesday, September 8, 2010

புதிய பறவை-புதிய அனுபவம்!

அப்பொழுதெல்லாம் சென்னை தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு தமிழ்ப் படம் போடுவார்கள்.அது எவ்வளவு மொக்கை படமாக இருந்தாலும் பார்த்து தொலைக்கவேண்டிய கட்டாயம்.அப்படி ஒரு ஞாயிறன்று பார்த்த படம்தான் இந்த புதிய பறவை! படத்தின் பெயரையும் ஹீரோ சிவாஜி என்பதையும் வைத்து இது ஏதோ அழுகாச்சி படம் என்ற மனநிலையில் தான் படம் பார்க்க அமர்ந்தோம்.ஆனால் படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் என் எண்ணம் தவிடு பொடியானது.தமிழில் வெளிவந்த one of the best suspense thirller movies என்று இந்த படத்தை சொல்ல முடியும்.இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிவாஜியின் நடிப்பு உலகின் எந்த நடிகரின் நடிப்புக்கும் சவால் விடக்கூடியது என்பது என் ஆணித்தரமான வாதம்.தமிழ் சினிமாவில் வந்த one of the best climax scenes  இந்த படத்தினுடையது.ஏதேதோ படங்களை எல்லாம் ரீமேக் செய்யும் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தை தேர்ந்த நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் கொண்டு ரீமேக் செய்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது என் கருத்து.அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்? பொதுவாக SUSPENSE THRILLER படங்களின் கதையை சொன்னால் படம் பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் குறைந்து விடும்.ஆனாலும் இந்த படத்தின் கதையை சொன்னால்தான் உங்களில் சிலர் இந்த படத்தை பார்க்க ஆர்வப்படுவீர்கள் என்பதால் படத்தின் கதையை (க்ளைமேக்ஸ் தவிர்த்து) உங்களுக்கு குழப்பமில்லாமல் சொல்ல முயற்சிக்கிறேன்.

                                                        

சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பி கொண்டிருக்கும் கப்பலில் எதேச்சையாக சந்திக்கிறார்கள் சிவாஜியும் சரோஜாதேவியும்.சரோஜாதேவியின் அப்பா வி.கே.ராமசாமியும் உடன் இருக்கிறார்.தமிழ் சினிமா மரபுப்படி சிவாஜிக்கும் சரோஜாதேவிக்கும் கண்டவுடன் காதல் மலர்கிறது.ஆனால் இருவரும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இந்தியா வந்ததும் சிவாஜி தன்னுடைய ஊட்டி எஸ்டேட்டுக்கு வருமாறு சரோஜாதேவியையும் அவரது அப்பா வி.கே.ராமசாமியையும் அழைக்கிறார்.சில நாட்கள் கழித்து சரோஜாதேவியும் ,வீ.கே.ராமசாமியும் சிவாஜியின் ஊட்டி எஸ்டேட்டுக்கு விஜயம் செய்கிறார்கள்.அப்பொழுது சிவாஜி தான் ஒரு அனாதை என்றும் உறவினர் யாரும் இல்லை என்றும் சொல்லி சரோஜாதேவியையும் வீ.கே.ராமசாமியையும் தன்னுடன் சில நாட்கள் தங்கி இருக்க சொல்கிறார்.
இந்த நாட்களில் சிவாஜிக்கும் சரோஜாதேவிக்கும் காதல் முற்றுகிறது.இருவரும் ஊட்டியில் டூயட் பாடுகிறார்கள்.இது AS USUAL தமிழ்சினிமா தானே என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

டூயட் பாடி முடித்து காரில் திரும்பிக்கொண்டிருக்கும் போது வழியில் ரயில்வே கிராஸிங்கில் ரயில் வருவதற்காக கேட் மூடப்பட்டிருக்கிறது.ரயில் கடப்பதற்காக காரில் சிவாஜியும் சரோஜாதேவியும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.ரயில் சத்தம் கேட்க கேட்க சிவாஜிக்கு ஒரு விதமான பதட்டம் ஏற்படுகிறது..ரயில் கடக்கும் போது சிவாஜி உச்சபட்ச பதட்டத்தை அடைகிறார்.இதை கவனித்த சரோஜாதேவி காரணத்தை துருவி துருவிக் கேட்க அதற்கு சிவாஜி சொல்லும் காரணம் கேட்டு சரோஜாதேவி அதிர்ச்சி அடைகிறார்.(படத்தின் முதல் திருப்பம்) ஆம் !சிவாஜி ஏற்கனவே சிங்கப்பூரில் இருக்கும் போது திருமணம் ஆனவர்.அப்படியானால் முதல் மனைவி? ஃப்ளாஷ்பேக் விரிகிறது.



   


சிங்கப்பூரில் ஒரு ஓட்டலில் பாடகராக இருக்கும் சவுகார் ஜானகியின் அழகிலும் குரல் வளத்திலும் மயங்கி அவரை காதலித்து திருமணம் செய்கிறார் சிவாஜி.ஆனால் திருமணத்திற்கு பிறகுதான் சவுகார் ஜானகியின் உண்மையான முகம் தெரிய வருகிறது.போதைக்கு அடிமையான அவர் தினமும் நடுநிசியில் வீடு திரும்ப, சிவாஜிக்கும் சவுகார் ஜானகிக்கும் சண்டை வலுக்க ஒருநாள் இரவில் சவுகார் ஜானகி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.முதலில் கோபத்தில் இருக்கும் சிவாஜி பின் எப்படியாவது சவுகார் ஜானகியை சமாதனப்படுத்தி கூட்டி வர கிளம்புகிறார்.வழியில் சவுகாரை சந்திக்கும் சிவாஜி வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார்.ஆனால் சவுகார் ஜானகியோ சிவாஜியை மேலும் அவமானப்படுத்த சிவாஜி அவரை அறைந்து விட்டு வீடு திரும்புகிறார்.அவமானம் தாங்க முடியாமல் சவுகார் ஜானகி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிலிருந்து தனக்கு எப்போது ரயில் சத்தம் கேட்டாலும் தனக்கு இந்த பதட்டம் ஏற்படுவதாக ப்ளாஷ்பேக் சொல்லி முடிக்கிறார் சிவாஜி

தான் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்ற உண்மையை வேண்டுமென்றே மறைக்கவில்லை என்றும் தனது கசப்பான கடந்த காலத்தை மறப்பதற்காகவே முதல் மனைவியை மறைத்ததாகவும் சிவாஜி சொல்ல சரோஜாதேவி சமாதானமடைகிறார்.அவரை திருமணம் செய்யவும் சம்மதிக்கிறார்.அவரது அப்பா வீகே ராமசாமியையும் சம்மதிக்க வைக்கிறார்.திருமண நிச்சயதார்த்ததிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

நிச்சயதார்த்தன்று மாலை மாற்றிக் கொள்ளும் சமயத்தில் வாசலில் ஒரு குரல் கேட்கிறது அத்தான் என்று ! (படத்தின் இரண்டாவது திருப்பம்.) பார்த்தால் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட சிவாஜியின் முதல் மனைவி சவுகார் ஜானகி! படத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல படம் பார்க்கும் நமக்கும் அதிர்ச்சி!தற்கொலை செய்து கொண்டது தான் அல்ல என்றும் தான் இதுவரையில் பெங்களூரில் இருக்கும் தனது சித்தப்பா வீட்டில் இருந்ததாகவும் இப்பொழுது மனம் திருந்தி கணவருடன் வாழ வந்திருப்பதாகவும் சொல்கிறார் அந்தப் பெண்.எல்லோரும் குழப்பமடைந்திருக்க சிவாஜி இவள் என் மனைவி இல்லை என்றும் தன் மனைவி தற்கொலை தான் செய்து கொண்டாள் என்றும் சொல்கிறார்.அவள் பிணத்தை தான் தான் அடையாளம் காட்டியதாகவும் சொல்கிறார்.இவள் தன் மனைவியை போலவே ஒத்த உருவம் கொண்டவள் என்றும் தன்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே இப்படி நாடகம் ஆடுவதாகவும் சொல்கிறார்.

இந்த குழப்பத்தால் சிவாஜிக்கும் சரோஜாதேவிக்குமான திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுகிறது.சரோஜாதேவி சிவாஜியை விட்டு பிரிய நினைக்கிறார்.ஆனால் சிவாஜி தனக்கு சில நாட்கள் அவகாசம் தருமாறும் அதற்குள் இவள் தன் முதல் மனைவி இல்லை என்பதை நிருபிப்பதாகவும் சொல்கிறார்.சரோஜாதேவியும் அதற்கு சம்மதித்து அந்த வீட்டிலேயே இருக்க முடிவு செய்கிறார்.சிவாஜி அவளை தன் முதல் மனைவி இல்லை என்று  நிருபிப்பதற்காக தன் நண்பனான போலீஸ் இன்ஸ்பெக்டரின் உதவியை நாடுகிறார்.முதலில் தற்கொலை செய்துகொண்ட முதல் மனைவியின் அங்க அடையாளங்கள் பற்றி  ஆராயும் போது அவருக்கு முதுகில் ஒரு பெரிய தழும்பு இருந்தது தெரிய வருகிறது.அந்த தழும்பு கண்டிப்பாக இந்த பெண்ணுக்கு இருக்காது என்றும் அதை வைத்து இவள் போலி என நிருபிக்கலாம் என்று இன்ஸ்பெக்டர் சொல்கிறார்.

அதன்படி சிவாஜியும் நடுக்கூடத்தில் வைத்து அவளின் ரவிக்கையை கிழித்து முதுகை பார்க்கும் போது முதல் மனைவிக்கு இருந்ததை போலவே அதே இடத்தில் தழும்பு இருக்கிறது. (மூன்றாம் திருப்பம்)மேலும் குழப்பம் அதிகரிக்கிறது.சிவாஜி மட்டும் இவள் தன் முதல் மனைவி இல்லை தன்னை சுற்றி ஏதோ சதி நடப்பதாக சொல்கிறார்.மறுநாள் இரவில் சிவாஜி எந்த பாட்டை கேட்டு மயங்கி தன் முதல் மனைவியை காதலித்தாரோ அதே பாட்டை இந்த புதிய பெண்ணும் பாடிக்கொண்டிருக்கிறார்.சிவாஜிக்கு ஆச்சர்யம்.இந்த பாட்டு உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க அவளோ அத்தான் இந்த பாட்டுதானே உங்களை என்னை காதலிக்கவைத்தது என்கிறாள்.(நான்காம் திருப்பம்)சரோஜாதேவிக்கு சிவாஜியின் மீதான நம்பிக்கை குறைகிறது.இவள்தான் உங்கள் முதல் மனைவி என்றும் இவருடன் தான் நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும் தான் பிரிந்து செல்வதாகவும் சொல்கிறார்.சிவாஜி தனக்கு கடைசியாக ஒரு சந்தர்ப்பம் தருமாறும் எப்படியும் இவள் போலி என்று நிருபிப்பதாக சொல்கிறார்.

என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் சிவாஜிக்கு கடைசியாக ஒரு யோசனை வருகிறது.தன் முதல் மனைவியின் அண்ணன் சிங்கப்பூரில் இருப்பதாகவும் அவருக்கு அவள் தங்கை அதாவது தன் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டது நன்றாக தெரியும் என்றும் அவரும்தான் பிணத்தை அடையாளம் காட்டியதாகவும் அவரை வரவழைத்தால் எல்லா குழப்பங்களும் தீரும் என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்ல அவரும் அவளது அண்ணனை சிங்கப்பூரிலிருந்து வரவழைக்க ஏற்பாடு செய்கிறார்.

அதே சமயம் இன்ஸ்பெக்டர் எப்படியாவது வந்திருக்கும் புதிய பெண்ணின் கைரேகையை தன்னிடம் கொண்டுவந்து கொடுக்குமாறும் அதை இறந்து போன முதல் மனைவியின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இவள் போலி என்று தெரிந்து விடும் என்று சொல்ல சிவாஜிக்கு நம்பிக்கை பிறக்கிறது.எப்படியோ அவளது கைரேகையை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விடுகிறார்.

க்ளைமேக்ஸ்- சிங்கப்பூரிலிருந்து முதல் மனைவியின் அண்ணன் வருகிறார்.அவரிடம் சிவாஜி , வந்திருக்கும் புதிய பெண் தன் முதல் மனைவிஇல்லை        என்று         அடையாளம்       காட்ட     சொல்கிறார்.
ஆனால்..............அந்த புதிய பெண்னை பார்த்ததும் இவள்தான் தன் தங்கை  என்றும் சிவாஜியின் முதல் மனைவி என்றும் சொல்கிறார் அண்ணன்.இத்தனை நாள் இவள் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார்.அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!சிவாஜிக்கே இப்போது நம்பிக்கை தளர்கிறது.அதே சமயத்தில் இன்ஸ்பெக்டர் அங்கு வருகிறார்.இரண்டு கைரேகைகளையும் ஒப்பிட்டு பார்த்ததாக சொல்கிறார்.சிவாஜிக்கு மீண்டும் நம்பிக்கை பிறக்கிறது.உடல்,உருவம்,முகம் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கலாம் ஆனால் கைரேகை மாறுபட்டே ஆகவேண்டும் அதை வைத்து இவள் போலி என்பது இப்போது தெரியவரும் என்கிறார். ஆனால்.......................இன்ஸ்பெக்டர் இரண்டு கைரேகைகளூம் ஒரே மாதிரியாக இருப்பதாக சொல்கிறார்.அப்படியானால்? அப்படியானால்?  வந்திருப்பது சிவாஜியின் முதல் மனைவிதானா? சிவாஜி ஏன் இல்லை என்று மறுக்கிறார்? அப்படியானால் கண்டெடுக்கப்பட்ட பிணம் யாருடையது? இத்தனை கேள்விகளுக்கும் படத்தின் கடைசி பதினைந்து நிமிடங்கள் பதில் சொல்கிறது.க்ளைமேக்ஸில் முதல் அதிர்ச்சியை தாங்கும் முன்பே நமக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது .படத்தை முதல் முறை பார்ப்பவர்களால் க்ளைமேக்ஸை யூகிக்க முடிந்தால் அவர்களுக்கு ஒரு HATS OFF!

அங்கங்கே சில லாஜிக் மீறல்கள்.தேவையில்லாத நாகேஷின் காமெடிக் காட்சிகள் என்று சில குறைகள் இருந்தாலும் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,இசை,ஒளிப்பதிவு,நடிப்பு என எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கிய அந்த காலக் கட்டத்தில் வந்த ஒரு HI-TECH THRILLER படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்ததில் படம் சில்லிட வைக்கும் ஒரு அனுபவம்!

Puthiya Paravai -A movie that gives roller coaster ride experience!

Saturday, September 4, 2010

விறு!விறு! - 'வீரு'

2001 ம் வருடம் என்று நினைவு, இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டு இருந்தது.இலங்கை அணியுடன் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்றன.இந்திய அணியில் பல பெயர் தெரியாத புதுமுகங்கள் இடம் பெற்று இருந்தனர்.முக்கியமான லீக் போட்டியில் நியூசிலாந்தை வென்றால் இறுதி போட்டியில் பங்கு பெறலாம் என்ற நிலை.250+ ஓட்டங்களை துரத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது.சச்சின் மற்றும் கங்குலி இல்லாத நிலையில் இந்தியாவின் வெற்றி சாத்தியமே இல்லை என்று தோன்றியது!அப்போது சச்சினை போலவே ஒத்த உருவமும் பேட்டிங் பிடிக்கும் தொனியிலும் துவக்க ஆட்டகாரர் ஒருவர் களம் இறங்கி இருந்தார்!முதல் சில ஓவர்கள்
அமைதியாக இருந்த அவரது ஆட்டம் அடுத்த சில ஓவர்களில் ஆவேசமானது.பந்துகளை நாலாபுறமும் பவுண்ட்ரிகளுக்கும் சிக்சர்களுக்கும் விரட்டி 70 பந்துகளில் 100 ரன் தொட்டதுடன் அன்றைய இந்திய அணியின் வெற்றிக்கும் காரணமானார்!அந்த வீரரின் பெயர் வீரேந்திர சேவாக்!



இன்றைய தேதியில் உலகின் most dangerous batsman என்று வர்ணிக்கப்படும் வீருவின் சாதனைப்பட்டியல் பெரியது!குறிப்பாக டெஸ்ட் போட்டியில் கிட்டதட்ட மூன்று முச்சதங்களை (309,319,293) தொட்ட ஒரே இந்திய வீரர் மற்றும் அதிக இரட்டை சதங்களை (6) அடித்த இந்திய வீரர் என்று இவர் நிகழ்த்திய சாதனைகள் பல!

There is no total good enough if shewag keeps going !I can travel any part of the world to see this man's batting only!If he plays or not keep him in your side so that opponent will feel the pressure always!இவையெல்லாம் வீருவைப் பற்றி சொன்ன கிரிக்கெட் வர்ணனையாளர்களின் கருத்து.

டெஸ்ட் போட்டிகளை போல ஒருநாள் மற்றும் 20-20 போட்டிகளில் வீரு சாதனைகள் படைக்கவில்லை என்பது பலரது  வருத்தம்.ஆனாலும் சமீபத்தில் இலங்கையில் நடந்த தொடரில் எந்த பேட்ஸ்மேனும் சோபிக்காத நிலையில் இவர் மட்டும் அதிக ரன் எடுத்தது அவரிடம் இருந்து இன்னும் பல சாதனைகள் வெளிப்பட இருப்பதற்கான அடையாளமாகவே கருதப்படுகிறது.நாங்களும் அதையே எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

Veeru- An extrodinary talent with lack of consistency!

Thursday, September 2, 2010

ஒரு பயணம்!

வயது முப்பதை தொட்டும் இன்னும் கல்யாணத்துக்கு பெண் கிடைக்காததால் வழக்கம் போல் ஜோசியக்காரர்களின் அறிவுரை கேட்டு உறவினர் எல்லோரும் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வர அட்வைஸித்தார்கள்! அதுவும் செவ்வாய் கிழமையில்!

அலுவலக வேலை நாள் என்பதால் விடுப்பு எடுக்க முடியாமல் அவதிப்பட்டு ஒரு வழியாக கடந்த செவ்வாயன்று பயணம் முடிவானது.நண்பர்கள் அனைவருக்கும் வேலை பளுவிருக்க தனியே பயணம் செய்ய ஆயத்தமானேன்.TRAIN ONLINE RESERVATION ல் EXPERT ஒருவன் TATKAL SCHEME ல் எனக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து கொடுக்க,BANGALORE TO MAYILADUTHURAI JN. DEPARTURE 19.05 PM ARRIVAL 7.00 AM.பண்ணிரண்டு மணி நேர பயணம் அதுவும் ரயிலில் சில வருட இடைவெளிக்கு பிறகு!நினைக்கும் போதே அலுப்பு தட்டியது!

இருந்தாலும் தெய்வ காரியம் என்பதால் மனதை தேற்றிக்கொண்டு பயணப்பட ஆர்வமானேன்.திங்களன்று அலுவலக வேலையை சீக்கிரமே முடித்துக்கொண்டு Bangalore city Jn சேரும் போது மணி 18.45.அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ரயில் வந்து நின்றது.ஆச்சர்யம்!இப்போதெல்லாம் TRAIN சரியான நேரத்துக்கு வருகிறதா என்று! S5 SEAT NO 47 ஐ தேடிப்பிடிப்பதில் சிரமம் எதுவும் இருக்கவில்லை!அதுவும் side lower berth  கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.ரயில் பயணத்தில் தான் எத்தனை விதமான மனிதர்களை சந்திக்க வாய்ப்பு நேரிடுகிறது.தாய்,தந்தைரை அன்போடு வழியனுப்பும் மகன் மருமகள்(!) ,காதலியை வழியனுப்ப அவளின் உடைமைகளையும் சுமந்து வந்திருந்த உண்மைக்காதலன் (!) மொத்த ரயிலிலும் தாங்கள் மட்டும்தான் பயணம் செய்வதை போல் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் கூட்டம்.இப்படி எத்தனை எத்தனையோ!






என்னதான் படுத்துக் கொண்டு பயணித்தாலும் ரயிலின் அசைவு தூக்கத்தைக் கெடுத்தது!அவ்வப்போது தர்மபுரி,சேலம்,திருச்சி என்று இறங்கி ஏறும் மனிதர்கள் நடமாட்டமும்!இனிமேல் பெண்களுக்கு lower berth தான் கொடுக்கவேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம்! சேலை அணிந்த இளம் பெண் ஒருவர் upper berth ல் ஏறிப்படுத்தது பரிதாபமாக இருந்தது! (சத்தியமாக!). 7.00 am க்கு மயிலாடுதுறை அடைய வேண்டிய ரயில் 7.30க்கு சென்றடைந்தது!

மயிலாடுதுறை சந்திப்பு நினைத்ததை விட பரபரப்பு குறைவாகவே இருந்தது.ஊருக்குள் பயணித்த போதுதான் அது இன்னும் தமிழ் மணம் மணக்கும் பெரிய நகரத்துக்கும் குறைவான சற்றே பெரிய ஊர் என்பது புரிந்தது.பேருந்து நிலையத்தின் அருகே ஏதாவது நல்ல லாட்ஜ் கிடைக்குமா என்று தேடி லாட்ஜின் பெயரில் ஏமாந்து ஒரு சுமாருக்கும் குறைவான லாட்ஜில் தங்க வேண்டியதாயிற்று.




மயிலாடுதுறை யிலிருந்து வைத்தீஸ்வரன் கோயில் 20 கிமீ.அரை மணி நேர பயணம்.கோயிலை சேரும் போது மணி 11.00 AM.கோயில் செல்லும் வழி எங்கும் நாடி சோதிட மையங்கள்.கோயிலின் முக்கிய மூன்று தெய்வங்கள் வைத்தியநாத சுவாமி,அங்காரகன்,தையல்நாயகி அம்மன்.தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஸ்தலம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது!



                               

திருமண தடை நீக்கும் தெய்வம் என்பதால் பெற்றோர்களையும் அவரது மகன் மகள்களையும் அதிகமாக காண முடிந்தது.அனைத்து தெய்வங்களையும் மனமாற தரிசித்து விட்டு வெளியில் வரும் போது மணி 1.00 pm.நீண்ட நாட்களுக்கு பிற்கு தமிழ்நாட்டின் அற்புத வெயிலை உண்ர முடிந்தது.பசி வயிற்றை கிள்ள இரவில் சரியாக தூங்காததால் உறக்கம் அசத்த room ல் சென்று ஓய்வு எடுப்பது என்று முடிவு செய்தேன்.





இருப்பினும் அலுவலக தொடர் தொலைபேசி அழைப்புகளால் உறக்கம் தொலைந்தது.மாலையில் மயிலாடுதுறை நகரின் கடைத்தெருக்களில் சுற்றிவிட்டு இரவில் கிளம்பிய மயிலாடுதுறை to பெங்ககளூர் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் பயணமாகி காலை 6.45 மணி அளவில் பெங்களூர் வந்தடைந்தேன்.

மொத்தத்தில் எந்திரத்தனமான நகர வாழ்க்கையிலிருந்து ஒருநாள் விடுபட்டு பசுமை சூழ்ந்த ஊர்களுக்குள்  ரயிலில் பயணமாகி எந்த சலனமும் இல்லாமல் தெய்வ வழிபாடு செய்து திரும்பியது மன நிறைவைத் தந்தது.இனி மாதம் ஒருமுறை இப்படி ஆன்மீக சுற்றுலா பயணம் செய்ய முடிவு  செய்துள்ளேன்! பார்ப்போம்!

A trip with holy spirit and homely atmosphere!

Sunday, August 29, 2010

ராஜா சார்!

எந்த ஒரு காரியத்தையும் சாமிய கும்பிட்டுட்டு ஆரம்பிக்கணும்!பதிவுலகில் என் முதல் பதிவாக இந்த இசை தெய்வத்தை பற்றி!


ராஜா சார்! இந்த மந்திர வார்த்தையை திரையுலகில் மட்டுமில்லாது பிற உலகிலும் உச்சரிக்காத மனிதர் இல்லை!இறைவனை இசையால் அறியலாம் என்று உணர்த்திய தன்னிகரில்லா படைப்பாளி.கர்நாடக இசை விற்பன்னர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ,ஏழை விவசாயி முதல் பணக்கார முதலாளி வரை அனைவரும் இவரின் ரசிகர்கள்.

இன்றும் தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சிகளில் இவரின் அசாத்திய இசைத் திறமையை ஆராய்ந்து ஆச்சர்யப்படும் கலைஞர்கள் ஏராளம்!

ஆன்மீகமாட்டும்,காதலாகட்டும்,சோகமாகட்டும்,சந்தோஷமாகட்டும்,அத்தனை உணர்வுகளுக்கும் இவரின் இசை உன்னதமானது!  தாயின்பெருமை (அம்மா என்றழைக்காத),பெண்ணின் கோபம் (ஓ ஒரு தென்றல்) ,மீனவரின் வாழ்க்கை துயரம் (கடலுல எழும்புற),காதலின் வலி (பாடி பறந்த கிளி),காதலின் பரவசம் (காதல் கவிதைகள் படித்திடும் நெரம்),விதவையின் விரக தாபம் (அழகு மலராட),பண்டிகை திருநாளின் கோலாகலம் (அந்தி மழை மேகம்),இயற்கையின் வர்ணிப்பு (மலையாள கரையோரம் தமிழ் பாடும்) இப்படி எந்த சூழ்நிலைக்கும் இவரின்  பாடல்கள் சேர்க்கும் அழகு தனி!மேற்கண்ட பாடல்கள் எல்லாம் ஒரு கடல் நீருக்கு ஒரு சொட்டு பதம் என்றளவில் மேற்கோள் காட்டியவை என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை!

இசை என்றால் என்னவென்றே தெரியாத என்னை போன்றவர்களுக்கு கூட கல்யாணி (அம்மா என்றழைக்காத),நளினகாந்தி (எந்தன் நெஞ்சில் நீங்காத),கம்பீர நாட்டை (சின்ன கண்ணன் அழைக்கிறான்), மோகனம் (பூங்கதவே தாழ் திறவாய்) என  ராகங்களின் பெயர்களை அறிமுகபடுத்திய இசைப்பிதா!நான் அறிந்தவரையில் பதிவுலகில் ஒருவரின் பிறந்த நாளுக்கு இத்தனை வாழ்த்துப்பதிவுகள் இவருக்கு மட்டும் தான் வந்தது என்பது இவருக்கு இருக்கும் ரசிக கூட்டத்திற்கு சான்று!

இன்றைய இளம் இயக்குனர்களின் திரைப்படங்களுக்கு மட்டும் இல்லாது கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர்களின் குறும் படங்களுக்கும் இவரின் இசை பயன்படுத்தப்படுவதிலிருந்து இவரின் இசை தாக்கம் புரியும்!திரைப்படத்தின் ஒரு சாதாரண காட்சியை கூட இவரின் இசை அசாதாரணமாக்கி விடும் என்பதற்கு கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் காட்சி உதாரணம்.


நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்-A real musical experience


 
ராஜா சார்-YOU ARE GENUIS! GREAT!GOD OF MUSIC!

குறிப்பு:பதிவுலகில் என் இந்த கன்னிப் பதிவைப் பற்றி விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.