படத்தின் துவக்க காட்சியில் கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த கதாபாத்திரமே கதையின் முடிவுக்கு காரணமாக்கியிருப்பது,இயல்பான காதல் கதையை அசாத்தியமான மலை பிரதேச பின்புலத்தில் படமாக்கியிருப்பது போன்றவை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக பிரபு சாலமன் வலம் வருவதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.சிறு வயதிலிருந்து பழகிய தன் தோழி/காதலி மைனாவின் அவசர கல்யாணத்தை தடுக்க பெரியகுளம் சிறையிலிருந்து தப்பித்து தன் குரங்கணி கிராமத்திற்கு வருகிறான் சுருளி.அவனை கண்டுபிடித்து திரும்பவும் சிறையில் அடைப்பதற்காக இன்ஸ்பெக்டர் பாஸ்கரும்,கான்ஸ்டெபிள் ராமையாவும் குரங்கணி கிராமம் வருகிறார்கள்.சுருளி மைனாவின் அம்மா குருவம்மாவிடம் சண்டை போட்டு மைனாவின் கல்யாணத்தை தடுத்து நிறுத்த அப்போது அங்கு வரும் இன்ஸ்பெக்டர் பாஸ்கரும் ,கான்ஸ்டெபிள் ராமையாவும் சுருளியை கைது செய்து அழைத்துச் செல்ல மைனாவும் அவர்களுடன் கிளம்புகிறாள்.இதன் பிறகு சுருளி ,மைனா,பாஸ்கர் ,ராமையா இந்த நான்கு கதாபாத்திரங்களின் குரங்கணி கிராமம் முதல் பெரியகுளம் வரையான பயணமும் சுருளி,மைனா காதலின் முடிவும்தான் படம்.

கதையாக சொல்லும் போது சுவாரசியம் குறைவாக தெரிந்தாலும் ரசனையான காட்சிகள் மற்றும் படமாக்கிய விதத்தில் மைனா உயரே பறக்கிறது.சுருளியான வரும் விதார்த்,மைனாவாக வரும் அமலா,இன்ஸ்பெக்டர் பாஸ்கராக வரும் சேது புதுமுகங்களாக இருந்தாலும் தன் வேலையை செவ்வனே செய்து இருக்கிறார்கள்.இதுவரை வடிவேலுடன் காமெடி செய்து அவரை வைத்து இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தை இயக்கிய தம்பி ராமையா இந்த படத்தில் கான்ஸ்டபிள் ராமையாவாக நடிப்பில் அசத்தி இருக்கிறார்.இவர்கள் தவிர படத்தில் வரும் அத்தனை சிறு கதாபாத்திரங்ககளும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இமானின் இசையில் நீயும் நானும் பாடல் காதுகளுக்கு இனிமை ,பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மெருகு கூட்டியிருக்கலாம்.சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம்.சிறு சிறு காட்சிகளில் கூட இயக்குனர் சிரத்தை எடுத்து இருக்கிறார்.படம் முழுக்க மெல்லிய நகைச்சுவை இழையோடிக் கொண்டிருப்பது படத்தில் அங்கங்கே ஏற்படும் தொய்வை சரிகட்டுகிறது!சமீபத்திய திரைப்படங்களை போலவே இந்த படத்திலும் நெகடிவ் கிளைமாக்ஸ்.இருந்தாலும் சற்று யூகிக்க முடிந்த ஆனால் அழுத்தமான கிளைமாக்ஸ்.
படத்தின் சில காட்சிகள் பருத்திவீரன்,பூ இன்னும் பிற படங்களை ஞாபகப்படுத்தினாலும் மைனா -JOURNEY OF LOVE என்ற படத்தின் TAGLINE க்கு ஏற்ப இயல்பான காதலை அழகான பயணத்தின் ஊடாக சொல்லியிருப்பது தமிழ்சினிமாவின் இன்னொரு சிறந்த முயற்சி.
MYNAA - An enjoyable journey!


//தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக பிரபு சாலமன் வலம் வருவதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.//
ReplyDeleteநல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்